Published Date: August 23, 2024
CATEGORY: CONSTITUENCY
சமுதாய மேம்பாட்டுக்கு பெண்கள் கல்வி கற்பது அவசியம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
மக்களின் வாழ்க்கை முறை உயர்வு மட்டுமின்றி சமுதாயம் மேம்பாடு அடையவும் பெண்கள் கல்வி கற்பது அவசியம் என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை ஆரப்பாளையம் திரு குடும்பப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 39ஆவது ஆண்டு விழா, வியாழன் கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:
கல்வியானது தனி மனிதன் மட்டுமின்றி சமுதாயத்துக்கும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. கல்வியால் சிறந்த மாணவர்களை உருவாக்குவதுதான் இலக்கு. பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டு உடற்பயிற்சி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் மூலம் இதை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் சம உரிமை வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் உயர்கல்வி பயில முன்வரும் மாணவர்களின் எண்ணிக்கை பிற மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. இதற்கு தி.மு.க அரசின் தொலைநோக்கு திட்டங்கள் தான் காரணம். கல்வி, உற்பத்தி துறையில் அதிக அளவில் பெண்கள் சாதித்து வருகின்றனர். மக்களின் வாழ்க்கை முறை உயர்வுக்கு மட்டுமின்றி சமுதாயம் மேம்பாடு அடையவும் பெண்கள் கல்வி கற்பது அவசியம் என்றார் அவர்.
இந்த விழாவில் மதுரை மாமன்ற உறுப்பினர் ஜெயராமன், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
Media: Dinamani